Feeds:
Posts
Comments

Archive for May, 2010

எனக்குத் தெரிஞ்சி இதுவரைக்கும், “ஆடை இல்லாதவன் அரை மனிதன்” அப்படீன்னுதான் சொல்லிக்கிட்டிருக்காங்க. ஆனா, இனிமே “ஃபேஸ்புக் பக்கமில்லாதவன் ஃபேஸே இல்லாதவன்”னு (அதாங்க, முகமே இல்லாதவன் அப்படீன்னு) சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு!

அட நான் ஒன்னும் சும்மா சொல்லலீங்க, உலகம் போல போற போக்கு என்னை அப்படிச் சொல்ல வைக்குது! ஆமாங்க, அந்த அளவுக்கு ஃபேஸ்புக் தளம், ஒவ்வொருவரோட அன்றாட வாழ்க்கையில அப்படியே பின்னிப் பிணைஞ்சு இருக்குன்னா பார்த்துக்கங்களேன்!  அப்படிப்பட்ட ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதில் ஏற்படும் சில/பல சிக்கல்கள் குறித்து சில இடுகைகளை மேலிருப்பானில் நீங்கள் படித்திருக்கக்கூடும்!

ஃபேஸ்புக் தளத்தினால் மக்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் பெரும்பாலும், ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற பல சிக்கல்களை ஃபேஸ்புக் பயனாளிகள் சந்திக்கக்கூடும்!

இப்படி நிறைய பிரச்சினைகள் இருக்குங்கறதுக்காக, ஒட்டுமொத்தமா ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்துவிடுவது நல்லது என்றோ, ஃபேஸ்புக்கினால் கிடைக்கும் சில நல்ல விஷயங்களை அனுபவிக்காமல் விட்டுவிடவேண்டும் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொண்டால் மட்டுமே போதுமானது! அதைப்பற்றிய சில நுணுக்கங்களை அலசத்தான் இந்தப் பதிவு…..

ஃபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்!

ஃபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்த, தவிர்க்க வேண்டிய 7 முக்கியமான தவறுகள்/செயல்களை பட்டியலிட்டிருக்கிறார்கள் சில வலைப்பின்னல் துறை வல்லுனர்கள். அவை….

1. சுலபமான ஒரு கடவுச்சொல்லை பயன்படுத்துவது (Using a Weak Password)

பெயர்கள், களஞ்சியத்தில் உள்ள சில சுலபமான வார்த்தைகள், அவற்றுக்கிடையில் எண்களை சேர்த்து பயன்படுத்துவது போன்றவற்றை உங்கள் கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் அவசியம்! அதற்க்கு பதிலாக, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களுடன் (upper- and lower-case letters) எண்கள் மற்றும் குறியீடுகளை (symbols) கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் உறுதியானது! ஒரு கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துக்களைக் கொண்டிருத்தல் நலம். மற்றுமொரு வழி, ஒரு வார்த்தையின் நடுவில் எண்கள்/குறியீடுகளை சேர்த்து கடவுச்சொல்லாக பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. உதாரணமாக, “houses” என்னும் வார்த்தையை hO27usEs என்று மாற்றிப் பயன்படுத்துவது!

2. உங்களின் முழு பிறந்த தேதியை வெளிப்படையாக குறிப்பிடுவது (Leaving Your Full Birth Date in Your Profile)

இணையத்தில் உலவும், அடையாளத் திருடர்களுக்கு (identity thieves), ஒருவரின் பிறந்ததேதிதான் முதன்மையான இலக்கு. அதைத் திருடி என்ன செய்வாங்கன்னு கேக்குறீங்களா? உங்க பிறந்ததேதியை வச்சி, உங்களின் மேலதிக தகவல்களை சேகரித்து, உங்க வங்கி கணக்கு/க்ரெடிட் கார்டு கணக்கு போன்றவற்றை கடத்தக் கூடும்?! அய்யய்யோ…அப்படீன்றீங்களா? சரி சரி, உடனே உங்க ஃபேஸ்புக் கணக்கை  திறந்து, profile  பக்கத்துக்கு போய், Info tab-அ கிளிக் பண்ணி, Basic Information பகுதியில வெறும் பிறந்த தேதி மட்டும்/மாதம் மட்டும் இல்லைன்னா பிறந்ததேதியே குறிப்பிடாம விட்டுடுங்க. சரிங்களா?!.

3. சுய பாதுகாப்பு கட்டுப்பாடு வாய்ப்புகளை அலட்சியப்படுத்துவது (Overlooking Useful Privacy Controls)

உங்க ஃபேஸ்புக் பக்கத்துல, மத்தவங்களுக்கு தொடர்பு வழங்க நண்பர்கள் மட்டும் (only friends) நண்பர்களின் நண்பர்கள் மட்டும் (friends of friends) அல்லது நீங்கள் மட்டும் (yourself) இப்படி பல கட்டுப்பாடுகள் வச்சிக்கலாம். இந்தப் பக்கத்துல, உங்க படங்கள், பிறந்த தேதி, மத பார்வை மற்றும் குடும்ப விவரங்கள், இது எல்லாத்தையும் மேற்குறிப்பிட்டபடி ஒரு வகையான கட்டுப்பாட்டுக்குள் வைங்க! மிக முக்கியமா, உங்க  தொலைபேசி எண், முகவரி போன்ற தொடர்பு விவரங்கள மத்தவங்க பார்க்குற மாதிரி வைக்காதீங்க!!

4. உங்களின் குழந்தையின் பெயரை புகைப்பட தலைப்புகளாக பயன்படுத்துவது (Posting Your Child’s Name in a Caption)

உங்க குழந்தைங்க பெயரை படங்களின் தலைப்புகளாகவோ, குறியீடுகளாகவோ (photo tags) பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. வேறு யாராவது உங்க குழந்தைங்க பெயரை பயன்படுத்தியிருந்தா, Remove Tag என்னும் தொடர்பை அழுத்தி நீக்கிடுங்க இல்லைன்னா அவங்கள நீக்கச் சொல்லுங்க!

5. நான் வெளியூருக்குச் செல்கிறேன் என்று குறிப்பிடுவது (Mentioning That You’ll Be Away From Home)

அதாவது, வெளியூருக்குச் செல்வதாயிருந்தா, “no one’s home” அப்படீங்கிற மாதிரியான விஷயங்கள எழுதுவதை தவிர்த்திடுங்க! நீங்க திரும்பி வந்து உங்க சுற்றுலா எப்படி இருந்ததுன்னு சொல்லிக்கலாம். அதேமாதிரி சுற்றுலா செல்லும் தேதியை மறந்தும் குறிப்பிடாதீங்க!!

6. கூகுள் போன்ற தேடியந்திரங்களின் பார்வையில் இருப்பது (Letting Search Engines Find You)

பரிச்சயமில்லாதவர்கள் உங்கள் ஃபேஸ்புக் பக்கங்களை, கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் அடைவதை தவிர்க்க, ஃபேஸ்புக்கின் சுயபாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook’s privacy controls) நண்பர்கள் மட்டும் என்பதை தேர்ந்தெடுங்கள் (select Only Friends for Facebook search results). முக்கியமா பொதுத் தேடுதல் முடிவகள் என்பதை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்! (Be sure the box for public search results isn’t checked)

7. மேற்பார்வையில்லாமல் குழந்தைகளை ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்த அனுமதிப்பது (Permitting Youngsters to Use Facebook Unsupervised)

இதுவரைக்கும் பார்த்ததிலேயே ரொம்ப முக்கியமானது இதுதான்! அதாவது, ஃபேஸ்புக் பக்கம் 13 வயது மற்றும் அதற்க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஃபேஸ்புக்கை பயன்படுத்தவேண்டும் என்று விதிமுறைப்படுத்தியிருந்தாலும், 13 வயதுக்கு குறைவானவர்களும் பயன்படுத்துகிறார்களாம். இவ்வயதுக்குட்பட்ட உங்க குழந்தை/குழந்தைகளும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் பட்சத்தில், அவர்களை மேற்பார்வையிட மிகவும் சுலபமான வழி, அவர்களின் நண்பர்களில் ஒருவராகச் சேர்ந்து கொண்டு, அவர்களின் தொடர்பு மின்னஞ்சல் பகுதியில் உங்கள் மின்னஞ்சலைக் கொடுத்து, அவர்களுக்கு வரும் தகவல்கள் உங்களுக்கு வரும்படியாக செய்துகொள்வதுதான்!

“குழந்தைகள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தாங்கள் எழுதும் சிலவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்கிறார், இணையதளத்தின் குற்றப்புகார் மைய மேற்பார்வையாளர் சார்லஸ் பேவலிட்ஸ் (Charles Pavelites, a supervisory special agent at the Internet Crime Complaint Center). உதாரணமாக, “அம்மா வர நேரமாச்சு, நான் சீக்கிரம் வீட்டைச் சுத்தப்படுத்தியாகனும்” அப்படீன்னு எழுதும் ஒரு குழந்தைக்கு, தினமும் தம் பெற்றோர் அலுவலகம் செல்லும் அல்லது வீடு திரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை,  தங்களையறியாமலேயே ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிடுகிறார்கள் என்று உணர்வதில்லை அப்படீங்கிறாரு சார்லஸ். இதுல இருக்குற சாதக பாதகம் என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.

இப்படி இன்னும் நிறைய விளக்கங்கள எழுதிக்கிட்டே போகலாமுங்க. அதனால, இந்தப் பதிவுல குறிப்பிட்டிருக்கிற 7 தவறுகளை முடிஞ்ச வரைக்கும் செய்யாமப் பார்த்துக்குங்க! அப்படிச் செஞ்சிருந்தா,  உடனே உங்க ஃபேஸ்புக் பக்கத்துக்குப் போயி திருத்திடுங்க. சரிங்களா? வேறு எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க (எனக்குத் தெரிஞ்சா) சொல்றேன்! இது தவிர்த்த முக்கியமான தவறுகள் எதாவது இருந்தா நீங்க சொல்லுங்க, நானும் நம்ம வாசகர்களும் தெரிஞ்சிக்கிறோம்! நன்றி.

Read Full Post »

மனுசனுக்கு வயசாக வயசாக, ஞாபக மறதி, தோல் சுருக்கம், நடை தளர்ச்சி, மூட்டுவலி இப்படி எத்தனையோ பிரச்சினைகள் ஒன்னு ஒன்னா வர ஆரம்பிக்கும்னும், அப்படி வர்றத தடுக்கமுடியாதுன்னும் நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். அதனால, இப்படியான பிரச்சினைகளை அனுசரிச்சுகிட்டு வாழனும்ங்கிற மனப்பக்குவத்தையும் வளர்த்துக்குவோம். இல்லீங்களா?

வயசானா வர்ற இதையெல்லாம் ஏத்துக்கிற நாம, வயசு ஏற ஏற நம்ம அறிவும் கூட வளரனும்/ஏறனும்னு நெனப்போமே தவிர, குறையனும்னு நெனக்கமாட்டோம். அப்படிக் குறைஞ்சா அதை ஏத்துக்கவும்  நம்மால முடியறதில்லை! அதுமட்டுமில்லாம, வயசாக வயசாக அறிவுப்பூர்வமாகவும், புத்திக்கூர்மையுடனும் சிந்திக்காத/ செயல்படாத ஒருத்தர ஏளனமாகவும், முட்டாளாகவும்தான் பார்க்கிறோம்!

ஆக, வயது முதிர்ச்சியோட சேர்த்து, அறிவு முதிர்ச்சியும் கண்டிப்பா இருக்கனும்ங்கிறதுக்காக, புத்தகம் படிப்பது, வல்லாரைக் கீரை,  வெண்டைக்காய் போன்றவை சாப்பிடுவது, இப்படி எத்தனையோ வழிகள்ல நம்ம புத்திக்கூர்மையை அதிகப்படுத்திக்க முயற்ச்சி பண்ணுவோம். ஆனா, இது மாதிரியான சில/பல நம்பிக்கைகளுக்கு அறிவியல்/விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லைங்கிறது உங்கள்ல பலருக்குத் தெரிஞ்சிருக்கும்!

அதனால, என்ன செஞ்சா நம்ம புத்திக்கூர்மையை அதிகப்படுத்திக்க முடியும்னு, விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோட, பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில முத்தான 10 வழிகள, சமீபத்துல ஆய்வாளர்கள் முன்வச்சிருக்காங்க. அதையெல்லாம் படிச்சிட்டு, “கத்தியை தீட்டாம புத்தியை  தீட்டுறதுக்கு” நான் தயார், நீங்க?

புத்திகூர்மைக்கான முத்தான 10 வழிகள்!

1. உங்கள் மூளையைத் தூண்டுங்கள் (Tease your brain)

credit: wikimedia, Tim Stellmach

குறுக்கெழுத்துப் போட்டியோ அல்லது அதற்க்கு இணையான மூளைப் பயிற்ச்சி விளையாட்டுகளோ, இவை எல்லாம் மூளையை  பெரிதாக  மேம்படுத்துகின்றன என்பதை திட்டவட்டமான ஆதாரங்களுடன் வரையறுக்கும் ஆய்வுகள் இதுவரை இல்லை!. விளக்கம் இங்கே. ஆனால், கல்வி கல்லாமை என்பது மூளை வளர்ச்சியின்மையில்தான் முடியும் என்பது உறுதி! அதனால, நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு உங்க மூளையை கசக்கி ஒரு விஷயத்தக் கத்துக்க முயற்ச்சி செய்றீங்களோ, அவ்வளவும் உங்க முதுமைக்காலத்துல அறிவு முதிர்ச்சிக்கு வித்திடுமாம்! ஆக மொத்தத்துல, ஒரு புது கணக்குக்கு விடை கண்டுபிடிக்கிறதுல மூளைக்கு கிடைக்குற பலனைவிட, எப்பவும் ஒரே puzzle சிக்கல் விளையாட்டுல எல்லா பகுதியையும் ஒன்னா சேர்க்குறதுல கிடைக்குற பலன் ரொம்பக் குறைவாம்! அடேங்கப்பா, இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?!

2. வைட்டமின் மற்றும் பிற ஊக்கமருந்துகளை தவிருங்கள்! (Skip the supplements)

wikimedia:Ragesoss

வைட்டமின்-தாது மாத்திரைகள், அப்புறம் சில மூளை மாத்திரைகள் (அப்படித்தானுங்கோ ஆங்கிலத்துல சொல்றாங்கோ?!), (ginkgo and melatonin) இதெல்லாமே குணப்படுத்துறதா/மேம்படுத்துறதா சொல்லப்படுற எந்த செயலையும், உடல்ல செய்யுறதில்லையாம்! ஐயய்யோ….அப்படியா? ம்ம்…அது மட்டுமில்லாம, இந்த மாத்திரைகளச் சாப்பிடுறதுனால, ரத்தக் கொதிப்பு, செரிமானக் கோளாறு, மலட்டுத்தன்மை பிரச்சினைகள், மன உளைச்சல்னு இல்லாத நோயெல்லாம் வேற வந்துடுதாம்! இது என்னடா சாமீ வம்பா போச்சு?!!

இப்படியெல்லாம் நாம எழுதினா, மக்கள் நம்ம கிட்ட சண்டைக்கு வந்துடுவாங்க! சத்தியமா இதையெல்லாம் நான் சொல்லலீங்க சாமீ!  நீங்களே இங்கே போய் பாருங்க உண்மை தெரியும்!!

3. சும்மா சில்லுன்னு ஒரு காத்து வாங்கிட்டு வாங்க (Chill out)

wikimedia: extranoise

மன உளைச்சல்னால, நியாபகச் சக்திக்கு அடிப்படையான மூளையின் ஹிப்போகேம்பஸ் (hippocampus) மற்றும் இன்னும் சில பகுதிகள்ல விஷத்தன்மையுள்ள பல வேதியல் பொருள்கள் கொட்டப்படுகிறதாம். (ஆதாரம்/விளக்கம் இங்கே). அதுமட்டுமில்லாம, மன உளைச்சலைக் குறைக்கும் தன்மையுள்ள, யோகா, நண்பர்களுடன் பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மன உளைச்சல் குறைந்து, நியாபகச் சக்தி குறைவது பெரிதும் தடுக்கப்படலாம் என்கிறது ஆய்வு!

4. நிறைய மீன் சாப்பிடுங்க!

wikimedia: Женя

உங்கள்ல சில/பல பேருக்கு அத்தியாவசக் கொழுப்பான ஒமேகா 3 (Omega 3) பத்தித் தெரிஞ்சிருக்கும். மனச்சோர்வு போன்ற நோய்களை குணப்படுத்த இக்கொழுப்புச் சத்து பயன்படுகிறதாம். ஓஹோ?!  அதுக்காக, உடனே கடையில மாத்திரைகளா விற்கப்படுகிற Omega 3 மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுடலாம்னு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க! ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகளான, மீன்கள், விதைகளச் (flax seeds) சாப்பிடுங்க. ஏன்னா, மாத்திரைன்னு போனாலே, பின் விளைவுகள்னு எதாவது ஒரு வம்பு அதுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இருக்க நிறைய வாய்ப்பு இருக்குதாம்! உண்மைதான், காலாவதியான மாத்திரை விற்பனைன்னு வேற கால ரொம்பவே கெட்டுகெடக்கு. உஷாரா இல்லைன்னா, ஊத்தி மூடிடுவாங்கங்கோவ்!!

5. அந்தக் காப்பியை நல்லா ரசிச்சு-ருசிச்சு குடிங்க!

wikimedia:Nevit Dilmen

இந்தக் கொட்டை வடி நீர்னு சொல்றாங்களே (அதாங்க காஃபி!), இனிமே அதைக் குடிக்கும்போது, சும்மா (காலைக்) கடனேன்னு குடிக்காம, கொஞ்சம் ரசிச்சு, ருசிச்சு எல்லாம் குடிச்சிப் பாருங்களேன் (அதான், ப்ரூ விளம்பரத்துல எல்லாம் வருமே அதுமாதிரி?!). ஏன் சொல்றேன்னா, காஃபியில இருக்குற கெஃபீன் (caffeine) அப்படீங்கிற வேதிப்பொருள், மூளையை பாதுகாக்குதாமாம்! அதாவது, ஒரு நாளைக்கு நாலு கப் காஃபி குடிச்சா, அல்ஷெய்மர்ஸ் (Alzheimer’s) அப்படீங்கிற ஒரு வகை நியாபகங்களை அழிக்கிற தன்மையுள்ள நோய் வராம  தடுக்குதாமாம் இந்தக் கெஃபீன் ( 30 to 60 % வரை!). ஆனா, இந்த மருத்துவத்தன்மையானது, காஃபியில இருக்குற கெஃபீன்லேர்ந்து வருதா, ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் அப்படீங்கிற வேதிப்பொருள்லேர்ந்து வருதான்னு தெரியலியாமாம்! இந்த மூளைப்பாதுகாப்பு, இன்னைக்கு மத்தியானம் குடிக்கிற காஃபியால, பல வருஷத்துக்கு இருக்குமாம்! அடங்கொக்காமக்கா…..சொல்லவேல்ல?!

6. நன்றாக உறங்கி கனவு காணுங்கள்!

Ilya Yefimovich Repin (1844–1930)

நம்ம முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு காணச் சொன்னாரு! விஞ்ஞானம் என்ன சொல்லுதுன்னா, நல்லா தூங்கி கனவு காணச் சொல்லுது. அதாவது, ஒருவர் சரியான நேரத்தை ஒதுக்கி உறங்கும்போது, கனவுகள் வரும். அப்போது, ஒருவரின் நியாபகங்களின் மீதான மேற்பார்வை செய்யும் மூளை, தேவையில்லாதவற்றை அழித்து, முக்கியமானவற்றை செப்பனிட்டு பாதுகாக்குமாம். ஆனா, சரியா தூங்கலைன்னா, நம் நரம்புத் தொடர்புகளின் (synapses) மீது, ஒரு வித புரதங்கள் தேங்கி, சிந்திக்கும் மற்றும் கல்வி கற்க்கும் திறன் குறைந்துபோகிறதாம்! மிக முக்கியமா, வருடக்கணக்கில் சரியான தூக்கமில்லாதவர்களுக்கு, அவர்களின் முதுமையில் அறிவுத்திறன் பெரிதும் குறைந்துவிட வாய்ப்புகள் இருக்கிறதாம்!

7. உடலைப் பேணி பாதுகாத்தல் அவசியம் (Take care of your body)

வருமுன் காத்துக்கொள்ளக் கூடிய நோய்களான, நீரிழிவு நோய் (Type II diabetes), உடல்பருமன், ரத்தக் கொழுப்பு போன்றவை கூட ஒருவரின் மூளையை பாதிக்கின்றனவாம்!  உடலளவிலான எல்லா உபாதைகளுமே, மூளையின் கற்க்கும் திறனையும், நியாபகச் சக்தியையும் பெரிதும் பாதிக்கின்றனவாம்! ரத்த ஓட்டம் (இருதயத்தை) சீராக வைத்துக்கொண்டாலே (உதாரணத்துக்கு புகைப்பிடிக்காமல், கொழுப்புச் சத்தை ஒதுக்கி) முதுமையினால் வரும் மூளைக்கோளாறுகளை குறைத்துக்கொள்ளலாமாம்! பார்த்து சூதானமா இருந்துக்குங்க நண்பர்களே…!!

8. உணவுக் கட்டுப்பாடை கவனியுங்கள் (Watch that diet)

wikimedia: Peggy Greb

உணவை அதிகமாக சாப்பிட்டால், மூளையைச் சோர்வாக்கி, பாதிக்கிறதாம்! அதேசமயம், உணவுக் கட்டுப்பாடு என்று மிகவும் குறைவாக சாப்பிட்டாலும் மூளை பாதிக்கப்படுகிறதாம். அநியாயத்துக்கு டயட்டிங்/உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு மனஅமைதி (?)  கிடைக்குமென்றாலும், அவர்கள் கவனச்சிதறல், குழப்பம் மற்றும் நியாபகச் சக்தி குறைவு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்களாம்! இது என்ன வம்பாப் போச்சு?!

9. சரிவிகித உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்!

உணவிலிருந்து கிடைக்கக்கூடிய மிக அதிகமான/குறைவான சக்தியானது மூளையின் மிருதுவான செயல்பாட்டை பாதிக்கிறது. ஆனால், இனிப்புச் சத்து குறைந்த, அதிக நார்ச்சத்துள்ள, மிதமான அளவில் கொழுப்பும், புரதமும் உள்ள உணவை சாப்பிட்டால், உடலின் செரிமானச் செயல்பாடானது, சீரான அளவில் நடந்து, உடல் பாகங்களின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாத்து, சரியான நிலையில் வைத்திருக்க உதவுகிறதாம்!!

10. சும்மா இல்லாம எதையாவது செய்யுங்க!

credit:coolest-gadgets.com

என்னப்பா, குத்து மதிப்பா எதையாவது செய்யுங்கன்னு சொல்றியேன்னு கேக்குறீங்களா? அதாவதுங்க, உடற்பயிற்ச்சின்ன உடனே, பலு தூக்கனும், தண்டால் செய்யனும், ஓடனும்னு லிஸ்ட் போட்டு யோசிக்கறதுதான் நிதர்சனம். ஆனா, மூளை ஆரோக்கியத்துக்கு என்ன செய்யனும்னு ஆய்வாளர்கள் சொல்றாங்கன்னா, ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் உங்களால் முடிந்த/பிடிச்ச எதாவது ஒரு உடற்பயிற்ச்சியை செய்தால் மட்டுமே போதுமானதாம். அது நடப்பது, தோட்ட வேலை செய்வது, ஓடுவது இப்படி எதுவா வேணும்னாலும் இருக்கலாம். எல்லாம் சேர்ந்ததா இருக்க வேண்டிய அவசியம் இல்லையாம்! இதத்தான் எதையாவது செய்யுங்கன்னு சுருக்கமாச் சொன்னேன். சரிங்களா?

என்னங்க புத்தியைத் தீட்ட கெளம்பிட்டீங்க போலிருக்கு?! சீக்கிரமே ஒரு நல்ல வாழ்க்கைமுறையை பின்பற்றி உங்க புத்திக்கூர்மையை மேம்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் சாதிக்க மேலிருப்பானின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Read Full Post »

சித்திரை மாதம் அமாவாசைக்குப்பின் வரும் ​ திருதியைத் திதி,​​ “அட்சய திருதியை’ என்று போற்றப்படுகிறது.​ ​(இவ்வருடம் 16.5.2010 அன்று அட்சய திருதியை ஆகும்.)​ இந்நாளில் மேற்கொள்ளப்படும் சுப காரியங்கள் அனைத்தும் மேன்மேலும் வளரும் என்று சொல்லப்படுவதால் இந்நாளில் தான தர்மங்கள் செய்வதும்,​​ ஏழை எளியவர்களுக்கு புது ஆடைகள் வழங்குவதும் நலம் தரும் என்பர்.​ வசதி இல்லாதவர்கள் அன்று பசுமாட்டிற்கு ஒரு வாழைப்பழமோ,​​ அல்லது ஒரு கைப்பிடி புல்லையோ ஆகாரமாகக் கொடுத்தாலும் மஹாலட்சுமி மகிழ்வாள்.​ அதனால்,​​ செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
கடந்த பத்து வருடங்களாக,​​ “அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கம் வாங்க வாய்ப்பு கிட்டும்;​ இல்லத்திற்கு வேண்டிய விலை உயர்ந்த பொருள்களை வாங்கும் சக்தி ஏற்படும்’ என்ற நம்பிக்கையில் அந்த நாளில் தங்க நகைகள் விற்கும் கடைகள் நோக்கி ஒரு சிலர் கிளம்பிவிடுகிறார்கள்.​ ஆனால்,​​ எந்த சாஸ்திரத்திலோ,​​ ஞான நூல்களிலோ அன்று தங்கம் வாங்கச் சொல்லி வற்புறுத்தவில்லை என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.​ ​​ ​ ​ எது எப்படி இருந்தாலும் புராணக் கூற்றின் படி,​​ இந்நாளில்தான் பிரம்ம தேவன் இந்தப் பூவுலகத்தைப் படைத்தார் என்றும்,​​ திரேதாயுகம் தோன்றியதாகவும்,​​ பரசுராமர் அவதரித்ததாகவும்,​​ பலராமர் அவதரித்தார் என்றும் அறியலாம்.
பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது சூரியபகவான் அவர்களுக்கு ஓர் அட்சயப் பாத்திரத்தை வழங்கியதாகவும்,​​ அதில் தேவையான உணவு ஒரு தடவை மட்டும் வரவழைக்க முடியும் என்றும்,​​ “அந்த அட்சயப் பாத்திரத்தை சூரியன் வழங்கிய நாள் அட்சய திருதியை’ என்று மகா பாரதத்தில் ஒரு குறிப்பு உள்ளது.​ ​ ​ ​ ஏழையான குசேலர் தன் நண்பனான பகவான் கிருஷ்ணனை இந்நாளில் ஆவலுடன் சென்று சந்தித்து செல்வ வளம் பெற்றதாகவும் புராணம் கூறுகிறது.​ துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்றதால்,​​ பாஞ்சாலி,​​ துரியோதனனின் சபையில் துயில் உரியப்படும் நிலைக்கு ஆளானாள்.​ அப்போது பாஞ்சாலி,​​ கண்ணனை வேண்டிட,​​ அவர் “அட்சயம்’ என்று சொல்ல,​​ அவளது ஆடை வளர்ந்து கொண்டே வந்ததாம்.​ அந்நாளும் இந்நாள்தான் என்று புராணம் கூறும்.​ ​ ​ ​ பொதுவாக,​​ இந்நாளில்,​​ பகவான் கண்ணனுக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் எண்ணியது கைகூடும்.​ அன்று அஷ்டலட்சுமி பூஜையை இல்லத்தில் மேற்கொண்டு,​​ சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் இனிப்பான செய்திகள் வருவதுடன் அஷ்டலட்சுமிகளின் அருளும் கிட்டும் என்பர்.
பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றினை பரமன் கொய்திட,​​ அது அவரின் கையில் ஒட்டிக் கொண்டது.​ அந்தக் கபாலத்துடன் ஈஸ்வரன்,​​ பிட்சாடனராக அலைந்து திரிந்து,​​ இறுதியில் ஸ்ரீ அன்னபூரணியிடம் காசியில் பிட்சை பெற்று நிவாரணம் பெற்றது இந்நாளில்தான்.​ பராசக்தியின் அம்சமான சாகம்பரி தேவி,​​ பல அரிய மருத்துவ விருட்சங்களை ​ உருவாக்கியதும்,​​ ஐஸ்வர்ய லட்சுமி,​​ தானிய லட்சுமி போன்ற திருமகள் அவதாரங்களும் அட்சய திருதியை நாளில்தான் தோன்றின.​ ​ ​ ​ இந்நாளில் வணிகர்கள் புதிய கணக்கு ஆரம்பிக்கலாம்.​ வீடு கட்டத் திட்டமிடுபவர்கள்,​​ பூமிபூஜை போடலாம்.​ புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.​ பெண் பார்க்கலாம்.​ மாணவ-மாணவிகள் புதிய நவீனக் கல்வி கற்கச் சேரலாம்.​ மறைந்த முன்னோர்களை நினைத்து வழிபாடுகள் செய்யலாம்.​ மற்றும் பல நல்ல காரியங்கள் செய்தால் எல்லாம் நல்லதே நடைபெறும்.​ ​ ​ ​ “அட்சயம்’ என்ற சொல்லுக்கு “வளர்வது’ என்று பொருள் சொல்லப்படுவதால்,​​ “வளம் சேர்க்கும் இந்நாளில் பொருள் வாங்க வசதி இல்லையே?’ என்று கவலைப்படாமல் சிறிதளவு உப்பு வாங்கினாலும் வளமான வாழ்வு கிட்டும்.​ உப்பு,​​ கடலிலிருந்து தோன்றிய பொருள்.​ மஹாலட்சுமியின் அம்சம்.​ எனவே,​​ இந்நாளில் லட்சுமி பூஜை சிறப்பிக்கப்படுகிறது.​ இந்நாளில் விரதம் மேற்கொண்டு,​​ தானதர்மங்கள் செய்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும்.

Read Full Post »

Older Posts »